கேரளாவில் கனமழை: நிலச்சரிவில் 3 பேர் பலி... 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இடுக்கி மற்றும் வானகம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.தொடர் மழை காரணமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 01, 2026 - 10:23
0 233
கேரளாவில் கனமழை: நிலச்சரிவில் 3 பேர் பலி... 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுக்கா அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி என்ற பெண் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடூர் பகுதியை தொடர்ந்து வாகமன் பகுதியிலும் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் வைக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் நாயர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலச்சரிவில் சிக்கியவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கனமழை காரணமாக கொச்சி–தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பலத்த மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன.

மழை பாதிப்பு காரணமாக பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User