போலீஸ் தாக்குதலால் உயிரிழந்தாரா?... தூத்துக்குடியில் வெடித்த சர்ச்சை!

தூத்துக்குடியில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கு போலீசார் தாக்குதலே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Jul 23, 2026 - 15:16
0 412
போலீஸ் தாக்குதலால் உயிரிழந்தாரா?... தூத்துக்குடியில் வெடித்த சர்ச்சை!

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக பணியாற்றி வந்தார். சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 18-ஆம் தேதி தென்பாகம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, மூன்று போலீசார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் நண்பர்களிடம் கூறியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மருத்துவமனையில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், போலீசார் தாக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை உடலை வாங்க மறுத்தனர்.

இதனால் திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடி–நெல்லை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், சாத்தான்குளம் காவல் மரணம் சம்பவத்தை நினைவூட்டுவதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User