வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர்: ஊக்கத்தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்..!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து ரூ 30 லட்சம் ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.

Jul 27, 2026 - 13:30
0 340
வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர்:  ஊக்கத்தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்..!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஜா முத்துப்பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து அவரது சாதனை இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 266 கிலோ எடையைத் தூக்கி ஆறாவது இடம் பிடித்திருந்தார். பின்னர் காயம் மற்றும் அதற்கான சிகிச்சை காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் சர்வதேச களத்துக்கு மீண்டும் திரும்பிய அவர், தற்போது காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User