அண்ணாமலையுடன் கைக்கோர்த்த நடிகர் விவேக் மனைவி.. அரசியலில் இணைவாரா?

சென்னையில் அண்ணாமலை தலைமையிலான ‘வி தி லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வி கலந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது.

Aug 17, 2026 - 10:45
0 140
அண்ணாமலையுடன் கைக்கோர்த்த நடிகர் விவேக் மனைவி.. அரசியலில் இணைவாரா?

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்தப் பேரணியில் அண்ணாமலையுடன் அருள் செல்வி மேடையைப் பகிர்ந்து கொண்டார். அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் இதுவரை பெரிதாக பங்கேற்காத நிலையில், இந்த நிகழ்வில் அவரது பங்கேற்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

விவேக்கின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணியை ‘வி தி லீடர்ஸ்’ முன்னெடுத்து வருவதால், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அருள் செல்வி தெரிவித்துள்ளார். மேலும், விவேக் தொடங்கிய ‘கிரீன் கலாம்’ அமைப்பும் ‘வி தி லீடர்ஸ்’ உடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியில் செயல்பட ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

விவேக் மறைவுக்குப் பிறகு ‘கிரீன் கலாம்’ அமைப்பின் பசுமைப் பணிகளை அருள் செல்வி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இதனால் இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, அருள் செல்வி ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்திருப்பது, எதிர்காலத்தில் அவர் அண்ணாமலையின் அரசியல் கட்சியில் இணைவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அரசியலில் இணைவது குறித்து அருள் செல்வி எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

பேரணியில் பேசிய அண்ணாமலை, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நீர்நிலைகள், கிராமப்புற வளர்ச்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தனது இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User