டெல்லியால் வந்த சிக்கல்.. பாஜகவில் இருந்து வெளியேறியதன் பின்னணி இதுதான்.. அண்ணாமலை பரபரப்பு..!
நீண்ட நாட்களாக பாஜகவில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணம் குறித்து அமைதி காத்து வந்த அண்ணாமலை, தற்போது அதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, 2021ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2025ஆம் ஆண்டு வரை மாநில தலைமைப் பொறுப்பில் இருந்த அவர், அதன்பிறகும் கட்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். பின்னர் கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இருந்து விலகி, ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார்.
இந்த நிலையில், இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, தனது விலகல் முடிவு திடீரென எடுக்கப்பட்டது அல்ல என்று கூறியுள்ளார். தேசிய தலைமையுடன் நீண்ட காலமாக இதுகுறித்து ஆலோசித்து வந்ததாகவும், 2025ஆம் ஆண்டின் இறுதியிலேயே தனது விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் அரசியல் தேவைகளை மாநில அளவில் உள்ள தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளே சிறப்பாக புரிந்து கொள்ள முடியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேசிய தலைமையால் டெல்லியில் இருந்து எடுக்கப்படும் முடிவுகள் தமிழ்நாட்டின் களநிலவரத்துக்கு எப்போதும் பொருந்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலத்தைச் சார்ந்த முக்கிய முடிவுகள் தமிழ்நாட்டிலேயே ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக பாஜகவை வலுப்படுத்தும் முயற்சியாக அண்ணாமலை மேற்கொண்ட நடைப்பயணமும் அவரது பேச்சில் இடம்பெற்றது. மாநிலம் முழுவதும் நீண்ட தூரம் பயணம் செய்து கட்சிக்கான ஆதரவை திரட்டியதாகவும், அதன் விளைவாக தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக தலைமையின் முடிவில் அண்ணாமலைக்கு மாற்றுக் கருத்து இருந்ததாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட நிலவரத்தையும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜகவில் இருந்து விலகியதன் பின்னணியில் டெல்லியில் பதவி பெறுவது போன்ற எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடிப்படை நிலையிலிருந்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதே தனது அடுத்தகட்ட நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)