ஆகஸ்ட் 5-ல் தமிழ்நாடு பட்ஜெட்… மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 அறிவிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். 

Jul 21, 2026 - 12:33
0 458
ஆகஸ்ட் 5-ல் தமிழ்நாடு பட்ஜெட்… மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 அறிவிக்கப்படுமா?

17-வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசின் முதல் சட்டமன்ற கூட்டம் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், இறுதி நாளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். அவரின் பதிலுரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், இறுதி நாள் களேபரமாக அமைந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த அமர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து, 2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் தேதியை அறிவித்துள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர். 

அதன்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மறுநாள், வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ளார். அதன்பிறகு, நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெறும். விவாதத்திற்கான நாட்கள் மற்றும் பிற அலுவல்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். 

தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிவித்த அவர், அமைச்சர்கள் தங்களது துறைகளுக்கான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள் என்றும் கூறினார். 

புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகரித்துள்ள நிலையில், த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பது ஆகஸ்ட் 5ஆம் தேதி தெரிந்துவிடும். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 1

Comments (0)

User