நேரத்தை வீணடிக்காதீர்கள்... மாணவர் போராட்டம் தொடர்பான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் அத்துமீறல் தொடர்பான மனுவை தாமாக முன்வந்து விசாரிக்கவும், அவசரமாக பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

Jul 22, 2026 - 12:03
0 188
நேரத்தை வீணடிக்காதீர்கள்... மாணவர் போராட்டம் தொடர்பான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஜூலை 20-ம் தேதி ‘சலோ சன்சத்’ போராட்டத்தின் போது போலீசார் மாணவர்களை தாக்கியதாகிய வீடியோக்களை சமர்ப்பித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு, “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள்” என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
.
நீட் தேர்வு மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்னைகள் லட்சக்கணக்கான மாணவர்களை பாதிப்பதாக வழக்கறிஞர் வலியுறுத்தினார். மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை காட்டும் வீடியோக்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு, “வீடியோக்களில் எங்களுக்கு ஆர்வமில்லை. அவற்றைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜூலை 20-ம் தேதி காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். தடுப்புகளை மீற முயன்றபோது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான அவசர மனுவை டெல்லி உயர்நீதிமன்றமும் ஏற்கனவே அவசரமாக விசாரிக்க மறுத்திருந்தது. டெல்லி போலீசாரின் நடவடிக்கை தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மறுத்த ஒரு நாளுக்குப் பிறகு, உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அவசர விசாரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அவசரமாக மனுவை பட்டியலிடக் கோரியபோது, “இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம்” என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யக்கூடாது உள்ளிட்ட புதிய கோரிக்கைகளையும் காக்ரோச் ஜனதா கட்சி முன்வைத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User