"தமிழன்டா எந்நாளும்" - சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று(ஆகஸ்ட் 10) முக்கிய தீர்மானமாக தமிழ்த்தாய் வாழ்த்து முன்னுரிமைக்கான தனித்தீர்மானத்தை நிறைவேற்றினார். 

Aug 10, 2026 - 10:31
Updated: 8 days ago
0 243
"தமிழன்டா எந்நாளும்" - சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதலமைச்சர் விஜய்
CM VIJAY TAKES RESOLUTION ON TAMILTHAI VAZHTHU

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று(ஆகஸ்ட் 10) முக்கிய தீர்மானமாக தமிழ்த்தாய் வாழ்த்து முன்னுரிமைக்கான தனித்தீர்மானத்தை நிறைவேற்றினார். 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசை தொடர்பாக தொடர்ந்து எழுந்து வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகழ்ச்சிகளில் முதலிடம் வழங்கும் வகையில் இன்று சட்டப்பேரவையில் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய். 

இந்த தீர்மானத்தின் பின்னணியில், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கி, அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் இடம்பெறாமல் இறுதியாக பாடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்திருந்தனர். மண், மொழி, மானம் காப்பதே தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்தது, அந்தவகையில் மொழி அடையாளத்தை தவெக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. 

இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக தவெக ஆட்சி அமைந்த பிறகு இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் அதிக கவனம் பெற்றது.

இந்த சர்ச்சைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரைக் கொண்ட அந்தப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில், பாடல் வரிசையில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு முதலில் வந்தே மாதரம், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தின.

இந்தநிலையில், இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ள்ளி வைத்த முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தை கொண்டுவந்தார். மேலும் "தமிழ் வெறும் மொழியல்ல; அது நமது உயிர், உணர்வு. தாய்க்கு இணையான புனிதமானது தாய்மொழியாகும். உலகின் மிகப்பழமையான நாகரிகமாகவும், தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும் தமிழ் திகழ்கிறது" எனவும், 

“தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும்; தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர்; பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும், நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும்" எனவும், 

"தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.. தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்" என முதலமைச்சர் விஜய் கூறினார்.  

இந்த தனித்தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் ஆதரவையும் தங்களது பாராட்டையும் சட்டமன்றத்தில் தெரிவித்தனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User