அன்னையர் தினம்!.. ஸ்டாலின், இபிஎஸ், விஜய் வாழ்த்து..

May 12, 2024 - 17:40
0 2.4
அன்னையர் தினம்!.. ஸ்டாலின், இபிஎஸ், விஜய் வாழ்த்து..

அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

உலகம் முழுவதும் இன்று (மே 12) அன்னையர் தின விழா கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் வாழ்ந்த மரியா ஜார்விஸ் என்பவரின் தாயன்பை அடியொட்டியே இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், "உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா!. தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்" எனக் கூறியுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “பூமி தாங்கும் முன்பே நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். 'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அதிமுகவிற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழ்நாடு மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது" எனத் தெரிவித்துள்ளார். 

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்பின் முழு உருவமாய்த் திகழ்ந்து குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமில்லை எந்நாளும் போற்றி வணங்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 2
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 2

Comments (0)

User