அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. விலகினார் அப்சரா ரெட்டி.. தவெகவில் இணையப் போகிறாரா?

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான அப்சரா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

Aug 13, 2026 - 09:30
0 303
அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. விலகினார் அப்சரா ரெட்டி.. தவெகவில் இணையப் போகிறாரா?

தனது முடிவு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அப்சரா ரெட்டி தனது கடிதத்தில், அதிமுகவுடனான தனது அரசியல் பயணம் வெறும் பதவி அல்லது அரசியல் கணக்கை அடிப்படையாக கொண்டதல்ல என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான ஆழ்ந்த நம்பிக்கையே அதற்கு அடித்தளமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் என்பது மக்களை பிரிப்பதற்கான கருவியாக இருக்கக்கூடாது என்றும், அனைவரையும் உள்ளடக்கிய வகையில் மக்களுக்கான சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். மேலும், தனது கொள்கைகளுக்கும் மனசாட்சிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அப்சரா ரெட்டி கூறியுள்ளார்.

Image

அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி தனக்கு வழங்கிய வாய்ப்புகள், நம்பிக்கை மற்றும் மரியாதைக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தனிப்பட்ட முறையில் அவர்மீதான மதிப்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். கட்சியை விட்டு விலகுவது எந்தவித கசப்புணர்ச்சியாலும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

திருநங்கையான அப்சரா ரெட்டியை அதிமுகவின் செய்தி தொடர்பாளராக ஜெயலலிதா காலத்தில் நியமித்திருந்தார். தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவருக்கு மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அண்மைய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெறாததும், அதன்பிறகு அக்கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவுக்கு செல்வதும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் உள்ளிட்ட தொகுதிகளைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அப்சரா ரெட்டியும் அதிமுகவில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், அப்சரா ரெட்டியின் விலகல் அதிமுகவுக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User