கோவை மாணவர் கொலை விவகாரம்: சரவெடியாய் வெடித்த உதயநிதி..!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

Aug 17, 2026 - 11:00
0 148
கோவை மாணவர் கொலை விவகாரம்: சரவெடியாய் வெடித்த உதயநிதி..!

தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. அப்போது, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதன் கொலை சம்பவத்தை கோஷ்டி மோதல் எனக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார். இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நடைபெறவில்லை என்றும், 20 பேர் சேர்ந்து அமுதனை தாக்கியதாகவும் கூறிய அவர், இது திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டினார்.

போதைப்பொருள் புழக்கம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன் காரணமாகவே அமுதன் கொல்லப்பட்டதாக அவரது பெற்றோர் தன்னிடம் தெரிவித்ததாக உதயநிதி கூறினார். மேலும், பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுத்த கோவை மாணவர் மட்டுமின்றி, சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பள்ளி மாணவர் தனுஷும் போதைப் பழக்கத்தை எதிர்த்ததால் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சம்பவங்கள் போதை கலாச்சாரத்தை எதிர்ப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், காஞ்சிபுரத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகுப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் உதயநிதி வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User