“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் -  எம்ஆர்கே இடையே கலகல…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கும் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றம் அவையில் கவனம் பெற்றது.

Aug 10, 2026 - 12:01
0 253
“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் -  எம்ஆர்கே இடையே கலகல…!

வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். அந்த எதிர்பார்ப்புடன் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என நினைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து, தங்களது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு பணிச்சுமையுடன் செயல்பட்டனர் என்பதை அவர் குறிப்பிட்டார். செய்திகளில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதிகாலை நேரத்திலேயே அமைச்சர்களைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் இருந்ததாக தெரிவித்தார்.

அப்போது, “நீங்களாம் ரிலாக்ஸா இருக்கீங்க... நாங்கள் எல்லாம் டென்ஷனாக இருப்போம்” என எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியபோது, பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதலமைச்சர் விஜய் சிறிய அளவிலான பிரச்சினைகளைக் கூட நேரடியாக கண்காணித்து வருவதாக கூறினார். குறிப்பாக, “நீங்களாவது 5 ஆண்டுகள்தான் டென்ஷனாக இருந்தீர்கள்... நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்” என அவர் பதிலடி கொடுத்தார்.

மேலும், முதலமைச்சர் இரவு நேரத்திலும், அதிகாலையிலும் கூட பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்து வருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். இதனால் தங்களுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுப்பு மற்றும் பதற்றம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து மீண்டும் பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், புஸ்ஸி ஆனந்த் கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்படுவதை பாராட்டி “புஸ்ஸி ஆனந்த் பிஸியா இருக்கீங்க”, புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கு நிர்வாக அனுபவம் கிடைக்க காலம் தேவைப்படும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

“மேடையில் பேசுவது எளிது; நிர்வாகத்தை நடத்தும்போதுதான் அதன் சிரமம் புரியும்” என அவர் கூறினார். மேலும், கடந்த காலங்களில் விவசாயிகள் சந்தித்த போராட்டங்கள் மற்றும் வேளாண் துறை சார்ந்த பிரச்சினைகளையும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த வார்த்தைப் பரிமாற்றம், பட்ஜெட் விவாதத்திற்கு மத்தியில் சட்டப்பேரவையில் சுவாரஸ்யமான தருணமாக அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User