கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு – “இரவுகளின் தாலாட்டு!”

கவியரசர் கண்ணதாசனின் எழுத்து, திரையிசைப் பாடல்கள் மற்றும் தனித்துவமான ஆளுமையைப் போற்றும் வகையில் இந்த நினைவுப் பதிவு அமைந்துள்ளது. கண்ணதாசன் மீதான கவிஞர் வாலியின் மரியாதை, அவரது படைப்புகளின் சிறப்பு மற்றும் தமிழர்களின் வாழ்வோடு கண்ணதாசன் பாடல்கள் கலந்த விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Aug 12, 2026 - 18:55
0 381
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு – “இரவுகளின் தாலாட்டு!”
Kaviyarasu Kannadasan

கவிஞர் நெல்லை ஜெயந்தா

இன்று வரை பல ஏக்கங்கள் எனக்குள்ளும் உண்டு. கலைஞரோடும் வாலியோடும் கலந்துரையாட முடிந்த என்னால், எம்.ஜி.ஆரோடும், கண்ணதாசனோடும் பழக முடியாது போயிற்றே என்பதுவும் ஒன்று. தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தரத்தை உயர்த்தும் தூண்டுகோலாக எம்.ஜி.ஆரும். அந்த வரத்தைக் கொடுக்கும் எழுதுகோலாகக் கண்ணதாசனும் இருந்ததனால், ஒரு கவிஞன் என்கிற முறையில் எனக்குள் விரிந்த ஏமாற்றம்தான் அது.

கண்ணதாசன்! கரைக்கு வரமுடியாமல் காவியக் கப்பல்களில் தங்கியிருந்த தமிழ்ச் சரக்குகளை இழுத்து வந்த எழுத்துத் தோணி. கரை கடந்து வரும் காற்றழுத்த மண்டலம் போல் திரை கடந்து வந்த பாட்டழுத்த மண்டலம்!
விழிநீரை எல்லாம் மொழிநீராய் மாற்றிய விஞ்ஞானி!
வாழ்க்கையின் கண்ணீரைத் தரையில் வடிக்காமல் திரையில் வடித்த தீர்க்கதரிசி!
கோடம்பாக்கத்தின் பாட்டுச் சாலையில் ராஜநடையில்
வந்த தனி மனித ஊர்வலம்!
கண்ணதாசன் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு, முரண்களால் சபிக்கப்பட்டவர்!
கண்ணதாசனிடம் ஒரு குழந்தையின் மனம் இருந்தது;

ஒரு விஞ்ஞானியின் மூளை இருந்தது; ஒரு போராளியின் வேகம் இருந்தது; ஒரு விவசாயியின் கவலை இருந்தது; ஒரு நாடோடியின் அனுபவம் இருந்தது. அதனால்தான், அவருக்கு ஓர் அரசனின் மரியாதை இருந்தது. பாரதியையும் கண்ணதாசனையும் ஓரிரு இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். விமர்சனங்களுக்குப் பயந்து வேஷம் போடத் தெரியாதவர்கள் இருவரும். அதிகம் தமிழுக்காகவும். கொஞ்சம் தனக்காகவும் வாழ்ந்தவர்கள் அவர்கள்.

கலைஞர் சொன்னதாக இராம நாராயணன் ஒருமுறை என்னிடம் சொன்னார்... "கண்ணதாசன் எழுதும்போது பார்த்திருக்கேன். அவனுக்குள்ளிருந்து சரஸ்வதியே எழுதுற மாதிரிதான் எழுது வான்யா!" என்று. ஒருநாள், கவிஞர் வாலி வீட்டில், வாலி, கவிஞர் முத்துலிங்கம், புலவர் மா.வேபசுபதி, கவிஞர் பழநிபாரதி, வலம்புரி சோமநாதன் போன்றோர் பேசிக்கொண்டிருந்தபோது வலம்புரி சோமநாதன் சொன்னார்.. உண்மையிலேயே கவிஞர் பாட்டைச் சொல்லும் போது, அவருக்குள்ளேயிருந்து யாரோ சொல்வது மாதிரிதான் சொல்லுவாரு""
அன்று வந்த வியப்பு இன்றும் அகலவில்லை என்னை விட்டு.

கண்ணதாசனை வானத்திற்குக் கீழே வாழ்கிறவர்கள் எல்லோரும் பாராட்டினாலும், திரை உலகில் கவியரசருக்கு எதிராகக் கடை விரித்திருந்த கவிஞர் வாலியே பாராட்டுவதுதான் உன்னதமான பாராட்டென்று உணர்கிறவன் நான். 'காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை பாட்டுக்குள் வைத்தவன்' என்றும், 'திரைப்பட அரங்குகளை எல்லாம் பாடல் பெற்ற ஸ்தலங்களாய் மாற்றியவன் என்றும், 'பண்ணுறங்கும் நாவழகன் பனி உறங்கும் பூவழகன் சேர சோழப் பாண்டியரு சேர்ந்து வந்த மூவழகன் என்றும் கண்ணதாசனைப் பற்றி வாலி எழுதிய வரிகளெல்லாம், காற்றில் மிதக்கும் சொல் வெட்டுக்கள் அல்ல: காலத்தை ஜெயிக்கும் கல்வெட்டுகள்!

பதினான்கு ஆண்டுகளுக்கும் முன்பு, வாலி வீட்டின் வரவேற்பறையில் நடந்த நிகழ்வொன்று நினைவிருக்கிறது எனக்கு 2012 நவம்பர் 23ஆம் தியதி நடைபெறவிருந்த வாலியின் 8-வது பிறந்தநாள் விழா மேடையில் இசைப்பதற்காக அவரைப் பற்றிய பாடலொன்றை நானெழுத, அரவிந்த் சித்தார்தா இசையில் அனந்து மாலதி பாடப் பதிவானது. விழாவிற்குச் சில தினங்களுக்கு முன்பு பாடலைக் கேட்டார், வாலி. 

சீனிவாசன் பொன்னம்மாள் தவமகனாய் பிறந்தாய்
திருவரங்கம் தீவுக்குள்ளே தமிழ்மகனாய் தவழ்ந்தாய்" என்று தொடங்கும் தொகையறா,
"கோடிக் கோடிக் கனவோடு கோடம்பாக்கம் சென்றாய், கண்ணதாசன் கண் எதிரே கொடி நாட்டி வென்றாய்"
என்று முடிவுற்றதும்.

"எங்கள் வாலிப வாலி..."
என்று பல்லவி தொடங்கும். பாடலை முழுமையாய்க் கேட்ட வாலி, மறுபடியும் போடச் சொன்னார். தொகையறா முடிந்ததும் நிறுத்தச் சொன்னார். இது என்னய்யா வரி? யாரை யார் ஜெயிக்கிறது..? கண்ணதாசனை நான் ஜெயிச்ச மாதிரி எழுதியிருக்கீரு! இந்த வரியை மாத்திட்டுதான் ஃபங்ஷன்ல பாட்டைப் போடணும் என்றார்.

நான் உடனே, 'இதுல என்ன தப்புய்யா.? அவரு ஒரு பக்கம் சிவாஜிக்கு எழுதி ஜெயிச்சாரு. நீங்க இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்கு எழுதி ஜெயிச்சீங்க. அதத்தான்யா எழுதியிருக்கேன்" என்றேன்.
"இதப் பாருய்யா... சினிமாப் பாட்டுக்குக் கோனார் நோட்ஸ் போடற வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம். வரியை மாத்துற வழியைப் பாரும்!" என்றார் வாலி உறுதியாக பிறகு, "கோடிக் கோடிக் கனவோடு சென்றாய்.

கண்ணதாசன் கொடியோடு கொடிநாட்டி நின்றாய்!" கோடம்பாக்கம் என்று மாற்றிப் பதிவு செய்தேன். கண்ணதாசன் மீது அப்படி ஒரு பக்தி வாலிக்கு மெட்டுக்குள் வார்த்தைகளை உட்கார வைத்ததால் அல்ல, வாழ்க்கையையும் உட்கார வைத்ததால்தான் கண்ணதாசனைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் உட்கார வைத்திருக்கிறார்கள். பக்தியும் உபதேசங்களும், பகுத்தறிவும் சமூகமும், கற்பனை களும் கலகலப்பும், உழைப்பும் சுரண்டல்களும், உண்மைகளும் உவமைகளும் பாடல்களின் சுருவாகப் பயணித்துக் கொண்டிருந்த பாதையில், குடும்ப உறவுகளையும், பாசப் போராட்டங்களையும், தனி மனித அனுபவங்களையும், இலக்கியங்களின் படிமங்களையும் பாட்டுக்குள் வைத்து, நம் வீட்டுக்குள் அனுப்பி வைத்த கண்ணதாசனை இன்றும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் தங்கள் காதுகளுக்குள் வைத்துக் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

படைப்பை மட்டுமல்ல, படைப்பாளியையும் உட்கார வைத்து எடை போடுவதுதான் இந்த உலகம் கண்ணதாசனின் பாடல்களில் இருந்த புலமையும். பழைமையும் மட்டுமல்ல, அவரின் பண்புகளில் இருந்த எளிமையும் இன்றும் உண்மையும்தான் இரண்டு கால்களாகி அசைக்க முடியாத புகழ் நாற்காலியில் அவரை அமர வைத்திருக்கிறது.
சுருக்கமாய்ச் சொன்னால், கண்ணதாசன் நம் கனவுகளின் எதிரொலி, காதலின் தூதுவன்..!

இரவுகளின் தாலாட்டு, ஏக்கங்களின் பெருமூச்சு.
துன்பங்களின் ஆறுதல், துயரங்களின் நிம்மதி.
தமிழின் வளமை, தமிழரின் பெருமை.
வாருங்கள் கையைக் குவித்து அல்ல, வாழ்க்கையைக் குவித்தே வணங்குவோம் அவரை!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User