'அம்பேத்கர் - TVK' வசனம் நீக்கம்... 'ஜன நாயகன்' படத்தில் CBFC கூறிய மாற்றங்கள் என்ன?

முதலமைச்சர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில், அம்பேத்கர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்து இடம்பெற்றிருந்த ஒரு வசனத்தை நீக்குமாறு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) அறிவுறுத்தியதாக படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.

Jul 17, 2026 - 13:32
0 218
'அம்பேத்கர் - TVK' வசனம் நீக்கம்... 'ஜன நாயகன்' படத்தில் CBFC கூறிய மாற்றங்கள் என்ன?

சென்சார் பிரச்னை காரணமாக பல மாதங்களாக ரிலீஸாக இருந்து வந்த, முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரிலீஸை முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சென்சார் கட்கள் தொடர்பாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

"அம்பேத்கரின் அரசியலமைப்பை பின்பற்றவில்லை என்றால் TVK-வின் அரசியலமைப்பு அமலுக்கு வரும்" என்ற பொருளில் இடம்பெற்றிருந்த வசனம் தணிக்கைக் குழுவின் முக்கிய எதிர்ப்புகளில் ஒன்றாக இருந்ததாக கூறிய அவர், அந்த வசனம் அரசியல் நோக்கத்துடன் அல்லாமல், விதிகளைப் பின்பற்றாததன் விளைவுகளை எளிமையாக மக்களிடம் புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டதாகவும், இருப்பினும் சட்டத்தை மதித்து CBFC கேட்ட அனைத்து மாற்றங்களையும் செய்ததாகவும் விளக்கம் அளித்தார். 

இதனுடன், அம்பேத்கர் படத்துடன் இடம்பெற்ற புத்தக அட்டைப் படம் மாற்றப்பட்டதாகவும், 'பாகவதம்', 'ரங்கநாதர்', 'ஓம்' போன்ற மதச் சொற்கள் ஒலிப்பதிவில் மியூட் செய்யப்பட்டதாகவும், 'ஆபரேஷன் மெலுஹா' தொடர்பான வசனத்தில் இடம்பெற்ற 'ஓம்' என்ற சொல் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மொத்தமாக சுமார் 20 விநாடிகள் நீக்கப்பட்டு, 10 விநாடிகள் மாற்றப்பட்டதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் தணிக்கைக்கு சென்ற இந்தப் படம், பல்வேறு ஆட்சேபனைகள் மற்றும் மறுஆய்வு குழு பரிசீலனை காரணமாக சான்றிதழ் பெறுவதில் தாமதமானது. இதுதொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்ற நிலையில், பின்னர் தயாரிப்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்று, தேவையான மாற்றங்களுக்குப் பிறகு படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டது.

விஜய், பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User