மீண்டும் கொண்டுவரப்படும் மசோதா… திமுக ஆதரிக்கிறதா? டி.ஆர்.பி சொன்னது என்ன?

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக்க் கூறப்படும் நிலையில், திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு. 

Jul 20, 2026 - 13:00
0 193
மீண்டும் கொண்டுவரப்படும் மசோதா… திமுக ஆதரிக்கிறதா? டி.ஆர்.பி சொன்னது என்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் சூழலில், முக்கிய அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் எப்படிய் அதற்கு எதிர்வினை ஆற்ற உள்ளன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுவதால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமாகிறது. கடந்த ஏப்ரல் மாத கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போன நிலையில், அதன் பின்னர் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் நாடாளுமன்ற கணக்கீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதாவது, தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள பிளவு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே சிதைந்துக் கொண்டிருக்கும் சூழல், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி அணியில் இருந்து சில எம்பிக்கள் ஆளும் தரப்புக்கு சென்றது உள்ளிட்ட நிகழ்வுகள், மத்திய அரசின் பலத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுக்க உள்ள முடிவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுவதோடு, இந்தியா கூட்டணியுடன் இணைந்து திமுக செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளிக்குமா அல்லது எதிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு திமுகவின் முடிவு என்ன என்பது குறித்து எம்பிக்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். 

தொகுதி மறுவரையறை எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை முழுமையான தகவலை வழங்கவில்லை என்று தெரிவித்த டி.ஆர்.பாலு, தொகுதிகளின் எண்ணிக்கை 25 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்றும் அவர் கூறினார்.

மேலும், மசோதாவின் முழு வரைவு கிடைத்த பின்னரே திமுக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் என டி.ஆர்.பாலு திட்டவட்டமாக தெரிவித்தார். அதேவேளை, மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும், அதனை கட்சி ஆதரிக்கும் என்றும் கூறினார்.

மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்பப்படும் என்றும், காவிரி பிரச்சினையைப் போல இதற்கும் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார். உயர்கல்வி மசோதா தொடர்பாகவும், அதன் வரைவை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User