ஆகஸ்ட் 12 வானில் நிகழ உள்ள 3 அதிசயங்கள்… பூமிக்கு ஆபத்தா? 

ஆகஸ்ட் 12ல் 6 கோள்களின் அணிவகுப்பு, முழு சூரிய கிரகணம், பெர்சீட்ஸ் விண்கல் மழை என 3 அரிய வானியல் நிகழ்வுகள் நடக்க உள்ளன. இந்த நிகழ்வுகளால் பூமிக்கு ஆபத்தா? இல்லையா? விரிவாக பார்ப்போம்.

Aug 08, 2026 - 11:51
0 329
ஆகஸ்ட் 12 வானில் நிகழ உள்ள 3 அதிசயங்கள்… பூமிக்கு ஆபத்தா? 

வானியல் ஆர்வலர்களுக்கு ஆகஸ்ட் 2026 ஒரு மறக்க முடியாத மாதமாக அமைய உள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 12, 2026 அன்று ஒரே நாளில் பல முக்கிய வானியல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

6 கோள்களின் அணிவகுப்பு

ஆகஸ்ட் 12-ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு புதன், வியாழன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே வானப்பகுதியில் அணிவகுத்தது போல் காட்சியளிக்கும்.

கிழக்கு திசையில் சூரிய உதயத்திற்கு சுமார் 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பு இந்தக் காட்சியை காண முடியும். புதன், வியாழன், செவ்வாய் மற்றும் சனி ஆகியவற்றை தெளிவான வானிலையில் வெறும் கண்களால் காணும் வாய்ப்பு உள்ளது. யுரேனஸ் மற்றும் நெப்டியூனை காண தொலைநோக்கி அல்லது பைனாகுலர் உதவியாக இருக்கும்.

இந்தக் கோள்கள் விண்வெளியில் உண்மையாக ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கவில்லை. பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியன் செல்லும் பாதையான எக்லிப்டிக் (Ecliptic) பகுதியில் அவை அமைந்திருப்பதால், ஒரே வரிசையில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

முழு சூரிய கிரகணம்

அதே ஆகஸ்ட் 12-ம் தேதி பின்னர் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளிலும், ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியும்.

சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும். இதனால் சில பகுதிகளில் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு காணப்படும்.

உச்சத்தை எட்டும் பெர்சீட்ஸ் விண்கல் மழை

ஆகஸ்ட் 12 முதல் 13-ம் தேதி இரவு வரை ஆண்டுதோறும் நிகழும் பெர்சீட்ஸ் விண்கல் மழை உச்சத்தை எட்டும்.
இந்த ஆண்டு அமாவாசை காரணமாக நிலவொளி குறைவாக இருப்பதால், வானம் அதிக இருட்டாக இருக்கும். இதனால் விண்கல் மழையை காண்பதற்கு சிறந்த சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நேரத்தில் மணிக்கு 100 விண்கற்கள் வரை காணப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு, எப்படி பார்க்கலாம்?

கோள்களின் அணிவகுப்பை காண விரும்புபவர்கள் நகரங்களின் ஒளி மாசுபாட்டிலிருந்து விலகிய பகுதிகளை தேர்வு செய்வது சிறந்தது. கிழக்கு வானம் தெளிவாக தெரியும் இடத்தில், சூரிய உதயத்திற்கு குறைந்தது 45 நிமிடங்களுக்கு முன்பே தயாராக இருப்பது உதவும்.

யுரேனஸ் மற்றும் நெப்டியூனை அடையாளம் காண பைனாகுலர் அல்லது தொலைநோக்கியை பயன்படுத்தலாம். இரவு வானத்தை பார்க்கும்போது கண்கள் இருளுக்கு பழக சில நிமிடங்கள் காத்திருப்பதும் முக்கியம்.

அச்சப்பட வேண்டுமா?

கோள்களின் அணிவகுப்பால் பூகம்பம், மிகப்பெரிய அலைகள் அல்லது இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் என்ற தகவல்களுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. இது கோள்களின் சுற்றுப்பாதை நிலைகளால் பூமியில் இருந்து பார்க்கும்போது உருவாகும் ஒரு அழகிய வானியல் காட்சி மட்டுமே.

ஆகஸ்ட் 12, 2026 அன்று அதிகாலையில் 6 கோள்களின் அணிவகுப்பு, பின்னர் முழு சூரிய கிரகணம், இரவில் பெர்சீட்ஸ் விண்கல் மழையின் உச்சம் என வானில் அடுத்தடுத்து நிகழ உள்ள இந்த அரிய நிகழ்வுகள், 2026-ம் ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக அமைய உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User