அகத்தியர் பிரதிஷ்டை செய்த சுயம்பு சிவலிங்கம்... திருமணம், குழந்தைப் பேறு அருளும் சிந்தாமணி சொக்கநாதர்!

துரையின் மகாராணியாகத் ம திகழும் மீனாட்சி, ஐயன் சொக்கனுடன் இணைந்து அதே திருப்பெயருடன் அருள் பாலிக்கும் திருத்தலங்கள் பல உண்டு.

Aug 02, 2026 - 18:00
Updated: 17 days ago
0 145
அகத்தியர் பிரதிஷ்டை செய்த சுயம்பு சிவலிங்கம்... திருமணம், குழந்தைப் பேறு அருளும் சிந்தாமணி சொக்கநாதர்!

அந்த வகையில் சிந்தாமணி என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருளும் இறைவனே, மதுரையைத் தொடர்ந்து, முதன்முதலில் சிவலிங்கத் திருமேனியராகத் தோன்றியதாகப் புராணம் புகல்கிறது.

அகத்திய மாமுனிவர் கயிலையில் இருந்து தென்பகுதிக்கு வந்த போது, மேற்கு தொடர்ச்சி மலை அருகே உரோமச மகரிஷி அவரை வரவேற்றார். ஒருநாள் மாலை இருவரும் சந்தியா வந்தனம் செய்ய புளிய மரங்கள் மிகுந்த இந்த வனப் பகுதிக்கு வந்தனர். அகத்தியர் குளம் ஒன்றை ஏற்படுத்தி, அருகே விநாயகரை நினைத்து வழிபட்டார். பின்னர் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து ஆராதித்தார்.

அப்போது உரோமச ரிஷி, அந்த சிவலிங்கத்தின் மேல் தமது கையை வைத்து, "பெருமானே நாளும் தாங்கள் வளர்ந்து இப்பகுதியில் உள்ளவர்களையும் செழிப்போடு வாழ வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் .இதனால் சிவலிங்கம் தினமும் வளர்ந்துகொண்டே சென்றதாம். அது முடிவே இல்லாமல் தொடரும் என்பதை அறிந்த அகத்தியர், "ஐயனே தாங்கள் வளர்ந்தது போதும். இனி தொடர்ந்து இதே கோலத்தில் எல்லோருக்கும் அருள்பாலிக்க வேண்டும்!" என வேண்டவே தமது வளர்ச்சியை இறைவன் நிறுத்திக் கொண்டாராம். இன்றும் இங்குள்ள சிவலிங்கம் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிதாக உள்ளதைக் காணலாம்.

அகத்தியர் உருவாக்கிய சிவலிங்கம் கால வெள்ளத்தால் மண்ணுள் புதையுண்டது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனின் உறவினனான புலியன் என்ற மன்னன் இப்பகுதிக்கு வந்தான். சொக்கநாதர் மேல் அளவற்ற அன்பும் பக்தியும் உடைய அவனது கனவில் ஈசன் தோன்றினார். தாம் புதைந்திருக்கும் இடத்தைக் கூறி, தன்னை வெளியே எடுத்துக் கோயில்கட்டுமாறு கூறினார்.

மன்னன் அப்படியே செய்தான். சிவலிங்கம் மிகப் பெரிதாக இருந்ததால் கோயிலில் உள்ள கற்சிலைகளையும் பெரிதாகவே செய்தான். கலை நயம் மிக்க இசை தூண்களையும், யாழித் தூண்களையும் உருவாக்கினான். பிற்காலத்தில் வந்த மன்னர்கள் கோயிலை மேலும் விரிவாக்கம் செய்து அம்மன் சன்னதியைக் கட்டினார்கள். விரும்பிய அனைத்தும் வாரி வழங்கும் தேவலோகத்து அபூர்வ ரத்தினக்கல் ஆதிகாலத்தில் இப்பகுதியில் கிடைத்ததாம். எனவே அக்கலின் பெயரான சிந்தாமணி என்பதையே ஊரின் பெயராக்கி உள்ளனர். எலுமிச்சை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் அப்பழங்கள் சிந்தி மணிகள் போல் நிறைந்து கிடக்குமாம். அதனாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்.

கோயிலில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி என தனித்தனியாக அமைந்துள்ளது. கோயில் முன்புறம் அகத்தியர் ஸ்தாபித்த விநாயகர் மற்றும் சிறு குளம் உள்ளன. அருகே கல்லினால் ஆன சிறு தேரில் விநாயகர் உள்ளார். கோயிலுக்குள் நுழைந்ததும் பலி பீடம், கொடிமரம், நந்தி உள்ளன. நந்தி பகவான், வடக்கு நோக்கி தலையைத் திரும்பியபடி உள்ளார். அம்பாளுக்கு எதிரே உள்ள நந்திமுழுமையாக வடக்கு நோக்கி பார்த்தவாறு உள்ளது. அக் காலத்தில் கோயில் தாழ்வாக இருந்ததால் நந்தி அருகே இருந்து உள்ளே இருக்கும் சிவலிங்கத்தை பார்க்க முடியவில்லை.

நந்தியின் தலை மறைத்தவாறு இருந்தது. எனவே அடியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நந்தி தன் தலையை குனிந்து வடக்கு நோக்கி பார்த்தவாறு திரும்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். அடுத்து இசை தூண்கள் மற்றும் யாழி மண்டபம் உள்ளது. மணிமண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் உள்ளனர். கருவறையில் கிட்டத்தட்ட ஐந்தரை உயர லிங்கத் திருவினராக வெண் பட்டாடை உடுத்தி மலர் மாலைகள் தரித்து சொக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கிறார், சொக்கநாதர்.

பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், காசி விஸ்வநாதர், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் உள்ளனர்.
அடுத்து, அம்பாள் சன்னதி எதிரே பலிபீடம், நந்தி கொடிமரம் உள்ளது. அன்னை மீனாட்சி கையில் கிளியுடன் சர்வ அலங்காரத்தோடு தரிசனமளிக்கிறாள்.
இத்தலத்து சுவாமி, அம்பாளை வணங்கினால் திருமணம் கை கூடும்; வேலை வாய்ப்பு, குழந்தைப் பேறு ஆகியவை கிடைக்கும், சொந்தங்களுடன் ஒற்றுமை நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User