மருத்துவ நிபுணர் இ.பி.எஸ். புதிய சிகிச்சை முறையை சொல்லட்டும் - கலாய்த்த அமைச்சர்

ஓம்பிரசோல் மாத்திரை நிறைய கையிருப்பு உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றே ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கூறுகிறார்.

Jun 23, 2024 - 03:19
Updated: 2 years ago
0 261
மருத்துவ நிபுணர் இ.பி.எஸ். புதிய சிகிச்சை முறையை சொல்லட்டும் - கலாய்த்த அமைச்சர்

எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் பின்பற்றப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை 3வது நாளாக கூடிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டையில் வருகை தந்தனர். அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு முதலில் கேள்வி நேரம் என்றும் அதன் பிறகு கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் பற்றி பேச அனுமதிக்கப்படும் என்றார். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச் சாராய விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை கேட்டு பெறுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் இன்றைக்கும் பேரவை தலைவர் அனுமதி கொடுக்கவில்லை.

மா.சுப்பிரமணியன் நேற்று ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்துவிட்டு பேட்டி கொடுக்கிறார். ஓம்பிரசோல் மாத்திரை நிறைய கையிருப்பு உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றே ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கூறுகிறார். நான் விஷச் சாராய முறிவுக்கான மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது என்று தான் தெரிவித்தேன். ஆனால் மா சுப்பிரமணியன் அல்சர் மருந்திற்கான ஓம்பிரசோல் மருந்து கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.

நான் சொன்ன மருந்தின் பெயர் ஃபோம்பிசோல்; ஆனால் அவர் சொல்கிறது ஓம்பிரசோல் மாத்திரை. அல்சர் மாத்திரை பெயரை அவர் சொல்கிறார். நான் கள்ளச்சாராய விஷ முறிவிற்காக செலுத்தப்படுகின்ற இன்ஜெக்சன். ஆனால் அவர் பெயரை மாற்றி சொல்கிறார். இது எங்கும் கிடைக்கவில்லை” என்றார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “20ஆம் தேதி அன்று ஓம்பிரசோல் மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி ஓம்பிரசோல் மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன்.

பிறகு இன்று ஃபோம்பிசோல் மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி. ஃபோம்பிசோல் இன்ஜெக்‌ஷன் [Fomepizole injection] தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள், மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User